அமைச்சராக எதுவும் செய்ய முடியவில்லை எனக்கூறியுள்ள புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்எல்ஏவாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகியுள்ளது. புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தமிழகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலும், கேரளத்தையொட்டி மாஹே பிராந்தியமும், ஆந்திரத்தையொட்டி ஏனாம் பிராந்தியமும் உள்ளன.
வெளிமாநிலங்களில் தங்கிப் பணிபுரிந்த ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த 16 பேர் நடைபயணமாக தங்கள் சொந்த ஊரான ஏனாம் பிராந்தியத்திற்கு வந்தனர். ஆனால், ஏனாம் பிராந்தியத்துக்கு நடந்து வந்தவர்களை அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இச்சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களை இன்று (ஏப்.28) சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சொல்வதைதான் அதிகாரிகள் கேட்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. வெளிமாநிலங்களில் தங்கிப் பணிபுரிந்து நடைபயணமாக சொந்த ஊரான ஏனாம் பிராந்தியத்திற்கு வந்த 16 பேரை ஊருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்குக் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். தற்போது அவர்கள் ஆந்திரப் பகுதியில் உள்ளனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்ப ஆந்திரக் கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியருக்கு கிரண்பேடி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நீண்ட தொலைவிலிருந்து நடந்து வந்த ஏனாம் பிராந்திய மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இது கிரண்பேடியின் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஆந்திரம் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர்களை 24 மணிநேரத்தில் உள்ளே வர கிரண்பேடி அனுமதிக்காவிட்டால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். அமைச்சராக எதையும் செய்ய முடியாமல் இருப்பதற்கு அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்எல்ஏவாக இருந்துவிடலாம்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.