கோயம்பேடு சந்தையில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காய்கறி சந்தையை வேறு இடங்களுக்கு மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கி வந்த சலூன் கடைக்காரர், கொத்துமல்லி வியாபாரி, லாரி ஓட்டுநர் ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையை வேறு இடங்களுக்கு மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக வேளாண் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடிதலைமையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் காய்கறி மொத்த வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் அரசின் முடிவை எடுத்துரைத்த அதிகாரிகள், வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுடன் கலந்துபேசி, முடிவை தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர். வியாபாரிகள் அனைவரும் அக்கூட்டத்திலேயே சந்தையை இடமாற்றம் செய்வதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:
கோயம்பேடு சந்தையை மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதியை கேளம்பாக்கத்திலும், ஒரு பகுதியை மாதவரத்திலும், ஒருபகுதியை கோயம்பேடு சந்தையிலும் இயக்குவது என அரசு தரப்பில் கூறினர். அலுவலகம் இல்லாமல் புதிய இடத்தில் பணிகளை மேற்கொள்ள முடியாது.
பணத்துக்கும் பாதுகாப்பு இல்லை. அதனால் அரசின் திட்டத்தை ஏற்க மறுத்த நாங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் அனைவரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினர்.