மத்தியப் பிரதேசத்தில் நவோதயா பள்ளியில் படித்து வரும் காரைக்கால் பகுதி மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கக் கோரி காரைக்கால் நவோதயா பள்ளி முன்பு இன்று பெற்றோர்கள் கண்ணீருடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாணவிகள், 8 மாணவர்கள் என மொத்தம் 17 பேர் மத்தியப் பிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள நவோதயா பள்ளியில் தற்போது படித்து வருகின்றனர். காரைக்கால் நவோதயா பள்ளியில் பயிலும் இவர்கள் 'மைக்ரேஷன்' அடிப்படையில் தற்போது மத்தியப் பிரதேசத்தில் படித்து வருகின்றனர்.
"கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், புதுச்சேரி அரசும் சிறப்பு ஏற்பாடு செய்து மாணவர்களை மத்தியப் பிரதேசத்திலிருந்து அழைத்து வர வேண்டும். பிள்ளைகள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எங்களிடம் தொலைபேசி மூலம் பேசும்போது பயந்து கொண்டு அழுகின்றனர். அதனால் எங்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பேச ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு அவர்களுக்குத் தகுந்த உளவியல் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என ஏற்கெனவே பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் காரைக்கால் அருகே இராயன்பாளையம் பகுதியில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா முன்பு இன்று (ஏப்.27) பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது பெற்றோர்கள் கூறும்போது, "வெளியிலிருந்து இங்கு வந்து படித்த மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டனர். ஆனால் எங்கள் பிள்ளைகள் அனுப்பி வைக்கப்படவில்லை. அங்கு அவர்கள் சரியான உணவு, தூக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். வந்து அழைத்துச் செல்லுமாறு அழுகின்றனர். அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அல்லது நாங்களே நடந்து சென்று அழைத்து வருகிறோம்" என்று கண்ணீருடன் கூறினர்.
இதுகுறித்துத் தகவலறிந்து வந்த போலீஸார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிள்ளைகளை மீட்டு வர நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்ததன் பேரில் பெற்றோர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர்.