கரோனா தொற்று சிகிச்சையில் இருந்த ஒருவர் புதுச்சேரியில் வீடு திரும்பியுள்ளார். தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று நலம் பெற்றவர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 3 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கரோனா தொற்று காரணமாக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடு தோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு உலகெங்கும் அதிகளவில் இருந்த சூழலிலும் புதுச்சேரியில் தொடக்கத்தில் இருந்தே பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருந்தது. புதுச்சேரி அரசு இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டு தொற்றுடையோர் சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது உள்ள சிகிச்சை நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் 8 பேர் கரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது 4 பேர் சிகிச்சையில் இருந்தனர். அதில் ஒருவர் தற்போது நலம் பெற்று வீடு திரும்பினார். இதனால் நலமடைந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. தற்போது 3 பேர் மட்டும் மருத்துவமனையில் தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளனர். அதில் இருவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் வீடு திரும்ப வாய்ப்புள்ளது.
ஒருவர் தொற்றுக்காக சில நாட்கள் முன்புதான் அனுமதிக்கப்பட்டார். வீடு, வீடாக சென்று சர்வே செய்து வருகிறோம். அதில் யாருக்கும் தொற்று இல்லை. ரேபிட் பரிசோதனை புதுச்சேரியில் தொடங்கவில்லை.
நாடு முழுவதும் கரோனா தொற்று விரைவாக பரவுகிறது. புதுச்சேரி அருகாமையுள்ள தமிழ்நாடு, ஆந்திரம் மாநிலங்களிலும் தீவிரமாக பரவுகிறது. இதை அறிந்து புதுச்சேரி மக்கள் மே 3 வரை முழு ஒத்துழைப்பு அவசியம் தர வேண்டும்" என்று தெரிவித்தார்.