கோயில் பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கியசேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
கரோனா வைரஸ் குறித்து அனைத்து தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆரோக்கியசேது செயலியை மத்திய அரசு வெளியிட்டது. இதை இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் ஆரோக்கியசேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆரோக்கிய சேது செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுநலன் கருதி இந்த செயலியை இத்துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு, பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரங்களை மண்டல இணை ஆணையர்கள் அனைத்து முதுநிலை திருக்கோயில்கள், சரக உதவி ஆணையர்கள், பட்டியலை சார்ந்த கோயில்கள் மற்றும் பட்டியலை சாராத கோயில்களில் இருந்து பெற்று நாள்தோறும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.