தமிழக அரசின் கரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் (HITS) ரோபோடிக்ஸ் ஆய்வு மையம் (ANRO), ‘செவிலி’ என்ற பெயரிலான சேவை ரோபோவை வடிவமைத்து உருவாக்கி உள்ளது. இதில் ஒரு ரோபோ பயன்பாட்டுக்கு வந்த நிலையில், மேலும் 4 ரோபோக்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செவிலியர்கள் நேரில்சென்று உதவுவதற்கு பதிலாக, ‘செவிலி’ சேவை ரோபோக்கள் பணியில் அமர்த்தப்படும். இவை தனிமை வார்டுக்குசென்று உணவு, மருந்துகள், இதர தேவையான பொருட்களை வழங்கும். மருத்துவப் பணியாளர்கள் தொலைவில் இருந்தபடியே, இதில் உள்ள திரை மூலமாக நோயாளிகளுடன் உரையாடலாம்.
ANRO மையத் தலைவர் பேராசிரியர் தினகரன் தலைமையில் எம்.எம்.ரம்யா உள்ளிட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மெக்கட்ரானிக்ஸ் மாணவர்கள் அடங்கிய குழுவினர் இந்த ரோபோவை உருவாக்கி உள்ளனர். தொழில்நுட்ப பயன்பாட்டில் ஆர்வம் காட்டும் தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆலோசனைகள் வழங்கிய ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி, இந்த திட்டத்துக்கு உதவிகள், ஊக்கம் வழங்கிய இந்துஸ்தான் பல்கலைக்கழக இணைவேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், இயக்குநர் அசோக் வர்கீஸ், துணைவேந்தர் கே.பி.ஐசக், இந்த முயற்சியில் துணைநிற்கும் ரெனால்ட் நிஸ்ஸான், உற்பத்தியில் உதவிய ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு பேராசிரியர் தினகரன் நன்றி தெரிவித்தார்.