திருச்சியில் சென்னை பைபாஸ் சாலையில் அரியமங்கலம் பழைய பால் பண்ணை பகுதியில் இயங்கி வந்த காய்கனி மொத்த வியாபாரம், பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இன்று இரவு முதல் பொன்மலை ஜி கார்னர் மைதானத்துக்கு மாற்றப்படுகிறது.
பால் பண்ணைப் பகுதியில் இயங்கிவந்த மொத்த காய்கனி விற்பனைக் கடைகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காய்கனிகள் வாங்கத் திரண்டதால் அங்கு தனி மனித விலகல் கடைப்பிடிக்க முடியாமல் போனது. இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இந்தக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனையடுத்து, இந்த மார்க்கெட்டை சமயபுரம் ஆட்டுச்சந்தை மைதானத்துக்கு மாற்றி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அங்கு செல்ல வியாபாரிகள் மறுத்து விட்டனர். அத்துடன் வேறு எங்காவது மாற்றினாலும் விற்பனையை நிறுத்திக் கொள்வதாகவும் அறிவித்தனர். அதனால் மீண்டும் பால் பண்ணை பகுதியிலேயே வியாபாரத்தைத் தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ‘திருச்சியைக் காப்பாற்றுங்கள்’என்று முதல்வர், பிரதமர் வரைக்கும் ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். தன்னார்வலர்கள் பலரும் தங்களால் இனி பணியாற்ற முடியாது என்று அறிவித்தனர். இது இந்து இணையதளத்தில் நேற்று செய்தியாக வெளியானது.
இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கரோனா வைரஸ் பரவும் சூழலில் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ஆட்சியர் விளக்கிக் கூறினார். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட வியாபாரிகள் இதற்கு சம்மதித்தனர்.
இதையடுத்து, பால் பண்ணைக்கு அருகிலேயே இருக்கும் ஜி கார்னர் பகுதியில் காய்கனி கடைகள் இயங்க அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று இரவு முதல் ஜி கார்னரில் காய்கனி மொத்த விற்பனை கடைகள் செயல்படும். இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், சில்லறை விற்பனைக்கு அனுமதி இல்லை என்றும், பொதுமக்கள் யாரும் இங்கு வரக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் உறுதியாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பொன்மலை ஜி கார்னர் மைதானத்திலுள்ள ஹெலிகாப்டர் தளம் பகுதியில் மொத்த காய்கனி விற்பனை வியாபாரிகளுக்கான கடைகள் ஒதுக்குவது, வந்து செல்லக்கூடியவர்களை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைப்பது, வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துவது போன்றவை குறித்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ ஆய்வு செய்தார்.
இக்கட்டான நேரத்தில் வியாபாரிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் சிறப்பாகக் கையாண்டு இப்பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகரக் காவல் ஆணையர் வி.வரதராஜூ ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.