மதுரை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் மீது காவல் துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் எச்சரித்துள்ளார்.
கரோனோ வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக தமிழகத்தில் இன்று முதல் சென்னை, மதுரை, சேலம், கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ‘கரோனா’பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தடைசெய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முற்றிலும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கு வேண்டிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மாநகராட்சியின் நடமாடும் வாகனங்கள் மூலம் தினந்தோறும் விற்பனை செய்யப்படுகிறது. மருந்துகள் உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பொருட்களுக்கு அந்தந்தப் பகுதியைச் சார்ந்த கடைகளின் பெயர், தொலைபேசி எண்ணுடன் துண்டுப் பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலும் மாநகராட்சியின் சார்பில் தெருவாரியாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அவர்கள் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டு பிரத்யேக உதவி மையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் இந்தத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிலர் வீடுகளை விட்டு வெளியே வருவதாகவும், அதன் மூலம் மாநகராட்சியின் பிற பகுதிகளில் இந்தத் தொற்று நோய் பரவுவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மாநகராட்சியில் 12 குடியிருப்புப் பகுதிகளில் இந்தத் தொற்று நோய் பரவியுள்ளது. தொடர்ந்து மற்ற குடியிருப்புகளுக்கும் இந்தத் தொற்று நோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கும், மாநகர காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘மாநகராட்சிப்பகுதியில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்டபகுதிகளில் தடையை மீறி வீட்டை விட்டு வெளியில் வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாநகராட்சியின் சார்பில் காவல்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றார்.