விருதுநகர் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர், சுகாதார ஆய்வாளர், பொறியாளர் என இதுவரை 25 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அவர்கள் விருதுநகர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆனாலும், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக இருந்தது. நேற்று அரசு ஆரம்ப சுகாதார ஆய்வகப் பெண் உதவியாளரும், பொறியாளர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆனது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டதில் விருதுநகர் அருகே உள்ள கன்னிச்சேரி புதூரில் ஒரு பெண் உள்பட 2 பேருக்கும், குள்ளூர் சந்தை அகதிகள் முகாமைச் சேர்ந்த 66 வயது முதியவருக்கும், சூலக்கரையைச் சேர்ந்த 24 மற்றும் 20 வயது இளைஞர்கள் 2 பேருக்கும், குமாரபுரத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவருக்கும், மேலசின்னையாபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் என 7 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.
அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.