கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை ஐஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, அங்கு பணிபுரியும் 100 துப்புரவுப் பணியாளர்களுக்கு அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று மருத்துவக் குழுக்கள் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஒரு குழு தயார் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 4,560 பேருக்கு மேல் பரிசோதனை மேற்கொண்டதில், 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த பலரும் பிளாஸ்மா சிகிச்சையளிக்க தங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என விருப்பம் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன" என்று ஆட்சியர் தெரிவித்தார் .
டீன் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.