தமிழகம்

ரூ.50 லட்சம் காப்பீடு திட்டத்துக்கு அரசாணை; புதுச்சேரி ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

அ.முன்னடியான்

புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் அவரசச் செயற்குழு கூட்டம் அமைப்பாளர் லட்சுமணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அமைப்பாளர் கலைச்செல்வன், தலைவர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் உடனடியாக முகக்கவசம், முழு உடல் கவசம், முகக் கண்ணாடி, கையுறை ஆகியவற்றை வழங்கி நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது, நோய்த் தொற்று ஏற்பட்டு உயிர் இழக்க நேருமாயின், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு திட்டத்தினை புதுவையில் அனைத்து சுகாதாரப் பணிப் பிரிவு ஊழியர்களுக்கும் செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிட வேண்டும். உயிர் துறக்கும் சுகாதாரப் பணியாளர்களை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கான டி.ஏ. உயர்வினை நிறுத்திவைத்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், செவிலியர், மகப்பேறு உதவியாளர், நர்சிங் ஆர்டர்லி, சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்குமேல் நிரப்பப்படாமல் உள்ளது.

மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவதற்கு முயற்சி செய்வதைப்போல், புதுச்சேரி அரசும் சுகாதாரத் துறையில் உள்ள அனைத்துப் பிரிவு காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT