தமிழகம்

அதிமுக போராட்டமே திசை திருப்புகிற முயற்சி: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

மதுவிலக்குக்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தை திசை திருப்புகிற முயற்சியிலே இன்றைக்கு இருக்கக் கூடிய ஆளுங்கட்சி காவல் துறையின் துணையோடு இளங்கோவனுக்கு எதிராக ஈடுபட்டிருக்கிறது. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது: ''ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு மற்றும் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

மதுவிலக்குக்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தை திசை திருப்புகிற முயற்சியிலே இன்றைக்கு இருக்கக் கூடிய ஆளுங்கட்சி காவல் துறையின் துணையோடு ஈடுபட்டிருக்கிறது. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தலைவர் கருணாநிதி இது குறித்து மிகத் தெளிவாகவும் அச்செயலைக் கண்டித்தும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

ஒரு வேளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன் கூறிய கருத்திலே அதிமுகவுக்கு ஏதாவது மாறுபாடுகள், வேறுபாடுகள் அல்லது அவதூறான நிலையில் அந்தக் கருத்துகள் இருந்திருக்குமேயானால் அது சம்மந்தமாக வழக்கு போட்டிருக்கலாம்.

பல அவதூறு வழக்குகளைப் போட்ட ஆட்சி தான், இந்த ஆட்சி. எனவே அந்த முறையைக் கையாளாமல், வேண்டுமென்றே திட்ட மிட்டு அந்தப் போராட்டத்தை திசை திருப்புகிற வகையில் அதுவும் அதிமுகவினுடைய மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கக் கூடிய வகையிலே நடந்து கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கொடுமை. அச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுகுறித்து தான் தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எல்லாருடைய கருத்தும் அது தான்'' என்று ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT