விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 43 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்சமயம் 19 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் நகரில் மட்டும் 33 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கரோனா தொற்று சமூகப் பரவலாவதைத் தடுக்கும் விதமாக இன்று விழுப்புரம் மாவட்டத்தில் மருந்துக் கடைகளைத் தவிர்த்து அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின. விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்காங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தேவையில்லாமல் சாலைகளில் சுற்றுவோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து வருகின்றனர்.
மீண்டும் வண்ண அட்டை முறை நாளை முதல் நடைமுறை
விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் மொத்த வியாபாரிகளுடன் ஆலோசனை செய்து நகர பொதுமக்களுக்கு வார்டு வாரியாக மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு ஏதுவாக வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மளிகைக் கடை மொத்த விற்பனையாளர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இயங்குவது என முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினர். இதனால் நேற்று பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கடைகளுக்குப் படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
இந்நிலையில் நேற்று ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற நடைமுறை கரோனா சமூகப் பரவலைத் தடுப்பதற்கு உகந்ததாக இல்லை என தெரியவருவதால் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வண்ண அட்டைகள் முறையே சரியாக இருக்கும் என்பதால் அதனையே பின்பற்ற மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வண்ண நடைமுறையை மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் நாளை முதல் வார்டு வாரியாக வழங்கப்பட்டுள்ள வண்ண அட்டைகளைப் பயன்படுத்தி விழுப்புரம் நகர மக்கள் வீட்டிற்கு ஒரு நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியே சென்று அத்தியாவசியப் பொருட்கள், மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.