சென்னையில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பால் கோயம்பேடு சந்தையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தால் அந்த பகுதியே நேற்று ஸ்தம்பித்தது.
கரோனா வைரஸ் பரவுவதைகட்டுப்படுத்த, ஊரடங்கை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை உள்ளிட்ட 5 மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு அமலாக்கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் கோயம்பேடு சந்தை சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும். மற்ற காய்கறி கடைகள் இயங்காது. நடமாடும் அங்காடிகள் மூலம் மட்டுமே காய்கறி, மளிகை பொருட்கள் விற்கப்படும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் 4 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்வதற்காக, நேற்று காலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கோயம்பேடு சந்தையில் குவிந்தனர். சந்தை நிர்வாகம், காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கெனவே அறிவித்திருந்தாலும், நேற்று அதை அமல்படுத்தவில்லை. அதனால் கோயம்பேடு சந்தை வளாகத்தில் கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், சரக்கு லாரிகள் என இயங்கியதாலும், மக்கள் அதிக அளவில் குவிந்ததாலும், அந்த சந்தையே ஸ்தம்பித்தது.
அங்கு பொதுமக்கள் யாரும் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. பெரும்பாலானோர் பெயரளவுக்கு முகக் கவசத்தை அணிந்திருந்தனர். காய்கறி சந்தைக்குள் சமூக இடைவெளி அறவே இல்லை. வியாபாரிகளும் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தவில்லை. அந்த சந்தையில் உள்ள குப்பைகளால் ஏற்படும் தூசியால் பலர் இருமல், தும்மலுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
மக்களும் வாகனங்களும் சந்தையில் நேற்று அதிக அளவில் கூடியதால், சிறு வியாபாரிகள் பலரால் சந்தைக்குள் நுழையவே முடியவில்லை. அங்கு காத்திருந்த பொதுமக்கள், விலையைக் கூட கேட்காமல் பொருட்களை வாங்கிச் சென்றனர். கடைக்காரர்களும் காய்கறிகளை எடையிடும் நேரத்தை குறைக்கவும், சில்லறை கொடுப்பதை தவிர்க்கவும், ரூ.10, ரூ.20, ரூ.50 மதிப்பில் கைகளாலேயே தோராயமாக காய்கறிகளை அள்ளி போட்டு விற்று தீர்த்தனர்.
நேற்று காய்கறி கடைகள் செயல்படும் நேரம் மாலை 3 மணி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அந்த விவரம் அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கும் வியாபாரிகளுக்கும் சென்று சேராத நிலையில், போலீஸார் அறிவுறுத்தலால் பல கடைகள் பிற்பகல் 1 மணிக்கே மூடப்பட்டன. சந்தையில் மக்கள் குவிந்ததால் பல காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தன.
கடந்த வாரம் 4 கட்டு புதினாரூ.10-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ஒரு கட்டு புதினா ரூ.10 -க்குவிற்கப்பட்டது. நேற்று நேரம் ஆகஆக, பிற்பகலில்தக்காளி கிலோரூ.20, உருளைக் கிழங்கு ரூ.35 எனவிலை உயர்த்தியும் விற்கப்பட்டது.