தமிழகத்துக்கு வருகை தந்துள்ள மத்திய குழு, அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கரோனா தொற்று நடவடிக்கைகளை ஆய்வு செய்தது.
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலர் டாக்டர்.வி.திருப்புகழ், தலைமையில் டாக்டர். அனிதா கோகர், பேராசிரியர், கம்யூனிட்டி மருத்துவம் (வி.எம்.எம்.சி), டாக்டர் சூரிய பிரகாஷ், பேராசிரியர் (என்.ஐ.டி.எம்), லோகேந்திர சிங், தலைமை பொது மேளாலர் இந்திய உணவு கழகம், டாக்டர் வி.விஜயன், ஐ.வி.சி., முதன்மை செயல் அலுவலர் இந்திய சுகாதார மற்றம் குடும்ப நலத்துறை ஆகியோர் கொண்ட ஐவர் குழு சென்னையில் கரோனா தடுப்பு பணிகளை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.
முதலாவதாக ஆழ்வார்பேட்டை சி.பி.இராமாசாமி சாலையில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 53 வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வசதி, கழிப்பிட வசதி, அடிப்படை வசதிகளை கேட்டறிந்தனர். பின்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக்கடைக்கு சென்று அங்கு 500 ரூபாய்க்கு அரசின் சார்பில் 19 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆய்வு செய்தார்கள்.
மற்றும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு போன்றவை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து கேட்டறிந்தனர். பின்பு தண்டையார்பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கோவிட் - 19 பரிசோதனை மையம் மற்றும் அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்களின் பகுதிக்கு சென்று ஆய்வு சென்றனர்.
மேலும் பெரிய மேடு, கண்ணப்பர் திடல், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். பின்பு புதுப்பேட்டை கரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
உடன் வருவாய் துறை கூடுதல் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்,சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ், துணை ஆணையர் மேகநாத ரெட்டி, மற்றும் உயர் அலுவலர்கள் உடன் சென்றனர்.