மதுரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், மருத்துவப் பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு கவச உடைகளை மாவட்ட காவல்துறையினர் வழங்கினர்.
மதுரையில் கரோனா ஊரடங்கையொட்டி உணவுப் பொருட்களுக்கு சிரம்மப்படும் ஏழை மக்கள் மதுரை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஏற்பாட்டின் பேரில் காவல் துறையினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை அருகிலுள்ள கோவில்பாப்பாகுடியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்கும் வகையில், தனிநபர் தடுப்பு உடைகள் காவல்துறை ஏற்பாடு செய்தது.
இதன்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா நோய் தடுப்பு உடைகளை வழங்கினார். மருத்துவ மனைக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் பேசி, சிகிச்சை அளிக்கவேண்டும் என, கூடுதல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில்,அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் நிர்மலா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியாஜன், மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், குமார், அரசு மருத்துவர் சதீஸ் கண்ணன் மற்றும் செவிலியர்கள், காவல் துறையினர் பங்கேற்றனர்.