தமிழகம்

தமிழகத்தில் வீடுகளிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் நோன்பை தொடங்கிய முஸ்லிம் மக்கள்

செய்திப்பிரிவு

முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் பிறை தென்பட்டதை அடுத்து, இன்று (சனிக்கிழமை) வீடுகளிலேயே முஸ்லிம் மக்கள் தொழுகையுடன் நோன்பிருக்கத் தொடங்கினர்.

புனித ரம்ஜான் மாதத்தில் பிறை தென்பட்டதும் நோன்பிருக்கத் தொடங்கும் முஸ்லிம் மக்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து ரமலான் பண்டிகைக் கொண்டாடுவது வழக்கம்.

தமிழகத்தின் பல பகுதிகளில் ரம்ஜான் மாதத்துக்கான முதல் பிறை வெள்ளிக்கிழமை இரவு தென்பட்டது. எனவே ரம்ஜான் நோன்பு ஏப்.25-ம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்கும்’’ என்று அரசு தலைமை காஜி சலாவு தீன் முகமது அயூப் அறிவித்தார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரமலான் நோன்பு நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் , ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க வேண்டிக் கொள்வதாகவும், இந்த புனித மாதம், அளவில்லாத அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வழங்கட்டும் என்றும், கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று, ஆரோக்கியமான உலகை ஏற்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், ரம்ஜான் நோன்பையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தக்கூடாது, நோன்பு கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கூடாது, வீடுகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை நடத்த வேண்டும் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலைப்பிறைத் தென்பட்டதை தொடர்து தமிழகத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் ரம்ஜான் நோன்பை முஸ்லிம் மக்கள் தொடங்கினர். பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால், வீடுகளிலேயே தொழுகைகளை மேற்கொண்டனர்.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT