கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக கரோனா வைரஸ் பரவல் இல்லை என கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் இதுவரை 1456 பேர் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கரோனா வார்டில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் பாதிக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வருகின்றனர்.
இவர்களுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு கரோனா தொற்று இன்றி குணமடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.
தேங்காய்ப்பட்டணம், மணிகட்டிபொட்டலை சேர்ந்த அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 14ம் தேதிக்கு பின்னர், அதாவது கடந்த 12 நாட்களாக குமரி மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்று யாருக்கும் இல்லை.
கரோனா வார்டிலும் நோய் தொற்றுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் குமரியில் சமூகப் பரவல் ஏதும் இன்றி கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.