நாடு முழுவதும் கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறக்க பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
கரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் தொடங்கியது முதல் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ரத்து செய்யப்பட்டன. மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு மே 3-ம் தேதிவரை தொடர் உள்ளது. மே 3 -ம் தேதிக்குப் பிறகும் என்ன நிலை என்பது தெரியாது. தற்போதுவரை ஊரடங்கு முழுமையாக எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை.
ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரித் தேர்வுகளை ஏற்கெனவே ஒத்திவைத்தது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
தேர்வுகளைப் பொரறுத்தவரையில் அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் இருப்பின் ஆன்லைன் வாயிலாகத் தேர்வுகளை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த இயலாவிட்டால் ஊரடங்கு காலம் முழுமையாக முடிவடைந்த பிறகு தேர்வுகள் நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஜிசி பரிந்துரை ஏற்கப்பட்டால் செப்டம்பர் மாதத்தில் இந்த ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்கும் எனத் தெரிகிறது.