ஊரடங்குக்குப் பிறகு வங்கிக்கணக்கில் பணம் தரும் முறைதான் நடைமுறையில் இருக்கும் எனவும், ரேஷன் கடை தேவையிருக்காது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உறுதியாக தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏழை மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு அரிசி, பருப்பு விநியோகிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் 30 மாதங்களுக்கு மேலாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. 800 ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. அதனால் புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் ஏழை மக்களுக்கான அரிசி கடந்த 12-ம் தேதி முதல் தரப்படுகிறது.
ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு பணி தரக் கோரியும் பலனில்லை. இச்சூழலில், ரேஷன் அரிசி விநியோகம் தாமதமாக நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதேபோல், மத்திய அரசு உதவவில்லை என்று முதல்வர் நாராயணசாமியும் குற்றம்சாட்டியுள்ளார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதுதொடர்பாக கூறுகையில், "முதல்வர் தவறான தகவல்களை தொடர்ந்து கூறி வருகிறார். மத்திய அரசு உதவி செய்யவில்லை எனக் கூறுவது பொய்யான தகவல். பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 83 ஆயிரம் பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.4.15 கோடி போடப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிஷான் சமான் திட்டத்தின் கீழ் 9,299 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1.85 கோடி போடப்பட்டுள்ளது. மேலும், இதே திட்டத்தின் கீழ் 913 விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
ஏழை முதியோர்கள், கணவரை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா ரூ.1,000 வீதம் ரூ.1.43 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்கு ரூ.7.22 கோடியை அளித்துள்ளது. 13 ஆயிரத்து 526 ஏழை குடும்பங்களுக்கு உஜ்வாலா திட்டப்படி 3 மாதங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு வாங்குவதற்கு ரூ.80.75 லட்சத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தியுள்ளது.
புதுச்சேரிக்கான ஆண்டு நிதி ஒதுக்கீட்டாக மத்திய அரசிடம் ரூ.424.5 கோடி நிதி பெறப்பட்டுள்ளது இதுபோல் நலவாழ்வு திட்டங்களுக்காகவும் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுள்ளனர். இவை அனைத்தும் சத்தமில்லாமல் பயனாளிகளுக்கு நேரடியாக சென்றடைந்துள்ளது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 6.5 லட்சம் ஏழைகளுக்கு 3 மாதங்களுக்கு அரிசி தருவதற்காக 9,425 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு புதுவைக்கு அனுப்பியுள்ளது. இதுவரை 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. அரிசி வழங்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இலவச அரிசி விநியோகத்தில் தாமதம் இல்லை. தற்போது இலவச அரிசி விநியோகம் வீடு வீடாக சென்று வழங்கப்படுகிறது. ஏற்கெனவே ரேஷன் கடை மூலம் அரிசி விநியோகம் செய்யப்பட்டபோது, 3 முதல் 4 வார காலம் ஆனது. தற்போதைய சூழலில் வீட்டுக்குச் சென்று அரிசி கொடுக்கப்படுகிறது. அதற்கு பிறகு, வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருக்கும். ரேஷன் கடைகளுக்கு தேவை இருக்காது" என்று தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், "இலவச அரிசிக்கான பணத்தை வங்கியில் செலுத்தினால் ரேஷன் கடைகளின் தேவை இருக்காது என ஆளுநர் கூறுவதும் ஏற்புடையதல்ல. மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசின் மூலம் விநியோகம் செய்யத்தான் ரேஷன் கடைகள் ஏற்படுத்தப்பட்டது.
அதை புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு திட்டமிட்டு சீர்குலைத்துள்ளதை ஆளுநர் தனி கவனம் செலுத்தி மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதில் அரசு திட்டமிட்டு செய்யும் தவறுகளை தடுத்து நிறுத்த வேண்டுமே தவிர, ரேஷன் கடைகளை மூட ஆளுநர் அனுமதிக்கக்கூடாது" என்று கோரியுள்ளார்.