பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு  

அ.முன்னடியான்

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றினால் 8 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மாஹேவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த 3 பேரில் ஒருவரான மூலகுளம் அன்னை தெரேசா நகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபரின் 18 வயது மகனுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் இன்று (ஏப் 25) கூறும்போது, "கரோனா பாதிப்புக்குள்ளான 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருடன் தொடர்பிலிருந்த 4 பேருக்கும் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மற்றொருவரான மூலகுளம் பகுதியைச் சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்குப் பரிசோதனை செய்ததில், அவருடைய 18 வயது மகன் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே, அவரை கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதித்துள்ளோம். இதன் மூலம் புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று 4 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, சீல் வைக்கப்பட்டுள்ள மூலகுளம் பகுதியில் இன்னும் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்துதல் தொடரும். மீதமுள்ள மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நாளை (ஏப் 26) பரிசோதனை செய்ய உள்ளோம். அதன் பிறகே முடிவு தெரியும்.

புதுச்சேரி எல்லைப் பகுதியில் மருத்துவக் காரணங்களை கூறிவிட்டு உள்ளே வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே, அப்பகுதிகளில் மருத்துவக் குழுவை அமைத்து, இன்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளோம். உண்மையில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அனுமதி அளிக்கவும், சாதாரண சிகிச்சைக்கு வருபவர்களை மே 3-ம் தேதிக்கு பிறகு வரும்படியும் வலியுறுத்தித் திருப்பி அனுப்பி வருகிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆர்.டி. பிசிஆர் பரிசோதனை ஜிப்மர் மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலேயே அந்தப் பரிசோதனையைச் செய்து வருகிறோம். இனி புதுச்சேரியில் எந்தப் பரிசோதனை செய்தாலும் ஆர்.டி. பிசிஆர் கருவி மூலமாகத்தான் செய்வோம்" என மோகன் குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT