திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளால் ஒட்டுமொத்த மாநகர மக்களும் கரோனா கலக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்சியின் இதயப் பகுதியில் காந்தி மார்க்கெட் செயல்படுவதால் போக்குவரத்து எப்போதும் பெரும் பிரச்சினையாகவே இருக்கும். அதனால் இந்த மார்க்கெட்டை மதுரை சாலையில் உள்ள கள்ளிக்குடிக்கு மாற்றக் கடந்த அதிமுக ஆட்சியில் முடுவெடுக்கப்பட்டு அங்கு பல லட்சம் ரூபாய் செலவில் புதிய வணிக வளாகமும் கட்டப்பட்டது.
ஆனால், அங்கு செல்ல விரும்பாத காந்தி மார்க்கெட் வியாபாரிகள் இங்கேயே வியாபாரத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் காந்தி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. சென்னை பைபாஸ் சாலை பால்பண்ணையில் காய்கனி மார்க்கெட்டை இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இப்பகுதி மக்கள் எளிதில் வந்து செல்லும் இடமாக இருப்பதால் சில்லறை வியாபாரிகள் மட்டுமல்லாமல் ஏராளமான பொதுமக்களும் இங்கு வந்து காய்கனிகளை வாங்கிச் செல்கின்றனர். தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேர் இங்கு வருவதாக அரசின் புள்ளிவிவரம் சொல்கிறது.
இவ்வளவு பேர் இங்கு குவிவதால் தனிமனித விலகலை யாரும் கடைப்பிடிக்க முடியவில்லை. இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் இங்கு நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக உளவுத் துறையினர் அரசுக்குத் தகவல் தந்தனர்.
எனவே, இந்த தற்காலிக காய்கறிச் சந்தையை சமயபுரத்தில் உள்ள ஆட்டுச் சந்தை மைதானத்தில் நடத்திக்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். அங்கு இயங்கினால் சில்லறை வியாபாரிகள் மட்டும் சென்று வாங்கி வருவார்கள். பொதுமக்கள் அவ்வளவாக செல்லமாட்டார்கள் என்பதற்காகத்தான் இந்த முடிவு.
ஆனால், அங்கே செல்லவும் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் மறுப்பு தெரிவித்தனர். மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தங்கள் மொத்த வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர். இதனால் அதிர்ந்து போன ஆட்சியர், மாவட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து வியாபாரிகளைத் தேடிச்சென்று பேசினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். ஒட்டுமொத்தமாக வியாபாரத்தை நிறுத்தினால் மக்கள் காய்கனிகள் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனாலும் ‘பழையபடி பால்பண்ணை அருகிலேயே அனுமதித்தால் மட்டுமே வியாபாரத்தை தொடர்வோம், வேறு எந்த இடத்துக்கும் செல்ல மாட்டோம்’என்று அமைச்சரிடம் வியாபாரிகள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து மீண்டும் பால் பண்ணை அருகிலேயே காய்கனிச் சந்தை இயங்கலாம் என தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவு அறிவிக்கப்பட்டவுடன் திருச்சியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கொதித்து எழுந்து விட்டனர். எந்தவித தனி மனித விலகலையும் கடைப்பிடிக்காத பால் பண்ணை பகுதி காய்கனி சந்தையால் ஒட்டுமொத்த திருச்சி முழுவதற்கும் கரோனா தொற்று பரவுதல் எளிதாகிவிடும் என்பது அவர்களின் ஐயம்.
அதனால் பால்பண்ணை பகுதியில் காய்கறி மார்க்கெட் இயங்க அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர், பிரதமர் உள்ளிட்டோருக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். பால் பண்ணை காய்கனிச் சந்தையில் மக்கள் பெருந்திரளாகக் கூடி இருக்கும் படத்தை இணைத்து, திருச்சியைக் காப்பாற்றுங்கள் ‘save trichy’ என்று ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், திருச்சியில் தன்னார்வலராகப் பணிபுரிகிறவர்களில் 56 பேர் ஒன்றிணைந்து இப்படிப்பட்ட சூழலில் இனியும் தங்களால் பணியாற்ற முடியாது என முடிவெடுத்து திருச்சி ஐஜிக்கு மனு அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலன் கருதி இடம் மாற்றியே ஆகவேண்டும் என்று உறுதியோடு இருந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, அரசியல் அழுத்தம் காரணமாக தற்போது தடுமாற்றத்தில் உள்ளார்.
ஒரு சில மனிதர்களின் தனிப்பட்ட ஆதாயத்தினால் ஒட்டுமொத்தத் திருச்சி மக்களும் பாதிக்கப்பட வேண்டுமா? என்று கவலை தோயக் கேள்வி கேட்கும் திருச்சி மக்கள், , “நாங்கள் காய்கனிகள் இல்லாமல்கூட வாழ்ந்து விடுகிறோம். ஆனால், கரோனாவுக்கு பயந்துகொண்டே வாழத் தயாராய் இல்லை. அதனால் பால் பண்ணை அருகே காய்கனிச் சந்தை இயங்கக் கூடாது" என்கிறார்கள்.