முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் பொதுமக்களின் வசதிக்காக மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தின் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை, கோவை, மதுரையில் ஏப்.26 முதல் ஏப்.29 வரையிலும், சேலம், திருப்பூரில் ஏப்.26 முதல் ஏப்.28 வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோன்று, சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஏப்.26 முதல் ஏப்.29 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நாட்களில்,காய்கறி, பழங்கள் போன்றவற்றை நடமாடும் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த மாவட்டங்களில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.25) வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில், நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், பொதுமக்களின் வசதிக்காக, இன்று (ஏப்.25) மட்டும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பொருட்களை வாங்கச் செல்லும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.