தமிழகத்தில் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை ஜமாத்துல் உலமா சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருப்பது ஆகும். இறை வசனங்கள் இறக்கப்பட்ட மாதம் என்பதால் இம்மாதத்திற்கு சிறப்பு உண்டு. 30 நாட்கள் நோன்பிருக்கும் இந்த மாதத்தில் அதிகாலையில் உணவு உண்டு நோன்பு வைத்தபின் தண்ணீர் கூட அருந்தாமல் மாலை வரை கடைப்பிடித்து சூரிய அஸ்தமானத்துக்குப் பின் நோன்பைத் திறப்பார்கள். இடையில் வழக்கமான ஐந்து வேளை தொழுகையுடன் கூடுதலாக இரவு தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகையும் உண்டு.
இந்த மாதங்களில் ஜகாத் எனும் ஏழைகளுக்கு தானம் செய்வதும் ஒரு கடமையாக்கப்பட்டுள்ளது. வருமானத்தைக் கணக்கிட்டு 7 -ல் ஒரு பகுதி அல்லது தங்களால் இயன்றதைத் தானமாக அளிப்பார்கள். 30 நோன்புகள் முடிந்த பின்னர் பிறைக் கணக்கின்படி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
பிறைக் கணக்கை வைத்து கணக்கிடப்படுவதால் பிறை தெரிவதை ஒட்டியே நோன்பும், பண்டிகையும் அனுசரிக்கப்படும். தமிழகத்தில் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை ஜமாத்துல் உலமா சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மாதத்தில் ஒவ்வொரு இஸ்லாமியரும் தவறாமல் நோன்பிருப்பார். ஐந்து வேளை தொழுகையுடன் சிறப்புத் தொழுகையும் தொழுவார்கள். தற்போது கரோனா தொற்று இருக்கும் நிலையில் கூட்டுத் தொழுகையைத் தவிர்க்கும்படியும் அவரவர் வீடுகளில் தொழும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நோன்புக்கஞ்சியை பள்ளிவாசலில் காய்ச்ச வேண்டம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.