மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவி போய் சேரவில்லை என்று உண்மையைச் சொன்னால் சிறையில் அடைப்பது சர்வாதிகாரம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோன்று டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5.30 மணி முதலே வேலை பார்த்து வரும் நிலையில், பகல் 11 மணிவரை அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்பதில் தொடங்கி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என்பதையும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் வேலுமணி களத்திலேயே இல்லை என்பதையும், திமுக எம்எல்ஏ கார்த்திக் சுட்டிக்காட்டியதை, ஒரு இணைய இதழ் வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக , பத்திரிகையாளர்கள் ஜெரால்டு மற்றும் பாலாஜி இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்துச் சென்று பலமணி நேரம் காத்திருக்க வைத்தனர்,
அதன் பின்னர் இரவு நேரத்தில் ஆன்லைன் பதிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சட்டவிரோதச் செயல்பாடு, ஆணவ அதிகாரத்தின் வெளிப்பாடு என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் இதைக் கண்டித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளைச் சரி செய்யாமல், உண்மையைச் சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைத் துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்”.
இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இதைக் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவு:
“கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதளப் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
அவர் மீதான நடவடிக்கையைக் காவல்துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்”.
இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.