தமிழகம்

புதுச்சேரி முதல்வர், மக்கள் பிரதிநிதிகளுக்கு கரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

செ.ஞானபிரகாஷ்

கரோனா நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதித்த புதுச்சேரி முதல்வர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன் குமார் தெரிவித்தார்.

மக்களிடம் குறைகளைத் தீர்க்கச் செல்வதாலும் அரிசி மற்றும் காய்கறி வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபடுவதால் புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் விரும்புபவர்கள் இந்த பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸில் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அதிமுகவில் அன்பழகன், பாஸ்கர், பாஜகவில் சாமிநாதன், சங்கர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் என 21 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

ஆர்டி- பிசிஆர் ( RT-PCR) முறைக்காக தொண்டையில் இருந்து உமிழ்நீர் கரோனா பரிசோதனை செய்ய எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமாரிடம் கேட்டபோது, ''சட்டப்பேரவை வளாகத்தில் கரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனையில் பங்கேற்ற முதல்வர், சபாநாயகர் உட்பட 21 பேருக்கும் தொற்று இல்லை என்று ஆய்வில் தெரியவந்தது.

ஏற்கெனவே புதுச்சேரியில் கரோனா தொற்று உறுதியாகி 3 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு தற்போது செய்யப்பட்ட பரிசோதனையிலும் தொற்று இருப்பதாக வந்துள்ளதால் தொடர் சிகிச்சையில் உள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT