குமரி மாவட்டத்தில் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் தப்பி ஓடினார். காரில் சென்ற அவரை நாங்குனேரி பகுதியில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி துறையினர், வருவாய்துறையினர், மற்றும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் இதுவரை 1253 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 16 பேருக்கு கரோனா இருந்தது. தற்போது இவற்றில் 4 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கும் வகையில் போலீஸார் இரவு, பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போலீஸாருக்கு கரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனை, மற்றும் சுகாதார நிலையங்களில் காவலர்களின் சளி, மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்படுகிறது.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று போலீஸாருக்கு பாதுகாப்பான முறையில் சளி, ரத்தம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோனைக்காக அனுமதிக்கப்பட்ட காவலர் ஒருவர் காரில் தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சிறப்பு காவல்படையில் காவலராகப் பணியாற்றிய 25 வயது போலீஸ்காரருக்கு
குமரி மாவட்டத்தில் பணி போடப்பட்டிருந்தது. இதற்காக சேலத்தில் இருந்து காரில் நாகர்கோவிலுக்கு உறவினர்கள் 3 பேருடன் அவர் வந்துள்ளார்.
அவர் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படைக்கு பணியில் சேர சென்றபோது, வெளிமாவட்டத்தில் இருந்து வந்ததால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சளி, மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. சளி, இருமல் இருந்ததால் பரிசோதனை முடிவு வரும் வரை அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால் அங்கு இருக்க பிடிக்காத காவலர் அங்கிருந்து வெளியேறி காரை எடுத்துகொண்டு உறவினர்களுடன் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் போலீஸாரிடம் இதுகுறித்து மருத்துவர்கள் போலீஸாரிடம் தெரிவிததுள்ளனர்.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகள், களியக்காவிளை, மற்றும் திருநெல்வேலி சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சோதனை சாவடி தாண்டி சென்றபோது காரில் தப்பி சென்ற போலீஸ்காரரை, பிற போலீஸார் பிடித்தனர்.
அவர், மற்றும் காரில் இருந்த உறவினர்கள் 3 பேரையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் மீண்டும் சேர்த்தனர். இச்சம்பவம் மருத்துவமனை, மற்றும் போலீஸார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.