கோவையில் 3 பெண் காவலர்கள் உட்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
தமிழகத்தில் நேற்று மேலும் 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமி ழகத்தில் கரோனா நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் அதிகபட்சமாக 27 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென் றுள்ளனர். மேலும், 2 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை 20 பேர் இறந்துள்ளனர்.
கோவை மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய கடந்த சில தினங்களாக சுகாதாரத் துறையினர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று போத்தனூர், குனியமுத்தூர், ராமநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவலர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 3 பெண் காவலர்கள் உட்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இவர்கள் போத்தனூர் குற்றப்பிரிவிலும் , போத்தனூர் சட்டம் ஒழுங்கிலும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் தங்கியிருந்த பகுதி, காவல் நிலைய வளாகங்களில் தடுப்பு மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.