தமிழகம்

இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி: கொடைக்கானலில் விளைந்த பிளம்ஸ் பழங்களை கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்ப ஏற்பாடு- மலை விவசாயிகள் மகிழ்ச்சி

பி.டி.ரவிச்சந்திரன்

இந்து தமிழ் திசை செய்தி எதிரொலியாக கொடைக்கானலில் விளைந்துள்ள பிளம்ஸ் பழங்களை கொள்முதல் செய்து கேரளாவிற்கு அனுப்பும் நடவடிக்கையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டுள்ளதால் மலைவிவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளில் பரவலாக பிளம்ஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது சீசனாக தற்போது பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. தற்போது அறுவடை செய்யப்பட்டுவரும் நிலையில் ஊரடங்கு காரணமாக பழங்களை வாங்கிச்செல்ல கேரளா. கர்நாடகா மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை.

இதனால் பிளம்ஸ் பழங்களை விற்பனைக்கு அனுப்புவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் மலைவிவசாயிகள் ஒவ்வொருவரும் லட்சக்கணக்கில் இழப்பை சந்தித்து வருவதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. (கொடைக்கானலில் தொடங்கியது ‘பிளம்ஸ்’ சீசன்- கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம்)

இதையடுத்து நடவடிக்கை எடுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இதையடுத்து நேற்று ஒரே நாளில் 5 டன் பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகளிடம் ஒரு கிலோ ரூ.60 க்கு கொள்முதல் செய்யப்பட்டு கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து இழப்பை சந்திக்க இருந்த விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனைசெய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT