சேலத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் ஒருவர்கூட வெளியில் வரக்கூடாது. மீறி வந்தால் பிடித்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. சென்னை உச்சத்துக்குச் சென்றுள்ளது. சென்னையில் 400 என்கிற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளன. இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நாம் மூன்றாவது நிலை நோக்கிச் செல்கிறோம் என்று எச்சரித்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். சேலத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தடுக்கவும், கரோனா தொற்று பரவுதலைத் தடுக்க சேலம் மாவட்டம் முழுவதும் முழுமையான ஊரடங்கை ஆட்சியர் அமல்படுத்தியுள்ளார்.
இதன்படி இன்று பிற்பகல் 1 மணி முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. எந்தத் தேவைக்காகவும் யாரும் வெளியே வரக்கூடாது. மருத்துவமனை, மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும். இந்த முழுமையான ஊரடங்கு திங்கட்கிழமை காலை வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மருத்துவமனை தேவைக்காக வெளியில் வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டி:
''மாவட்டம் முழுவதும் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு, பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது.
பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள் வீடு தேடி வரும். 200 நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகளைக் கொடுத்துவிடுவோம். பொதுமக்கள் போன் செய்தால் மளிகைப் பொருட்கள் வீடு தேடி வரும். மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும்.
காலை வாக்கிங், மருத்துவமனை போன்றவற்றிற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். யாருமே வெளியில் வரக்கூடாது மீறி வந்தால் பிடித்து தனிமைப்படுத்தப்படுவார்கள்''.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இதேபோன்று கடலூர் மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமையை முழு ஊரடங்கு நாளாக அறிவித்துள்ளது.