தமிழகம்

எங்களுக்கும் இது புண்ணிய காலமில்லை: கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் புரோகிதர்கள்

கரு.முத்து

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒருமாதம் காலம் முடிந்துவிட்டது. பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கார்ப்பரேட் கம்பெனிகள், ஊடகங்கள் என அனைத்துத் தரப்புக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சாமானிய மக்களின் நிலையோ சொல்லவும் முடியாத அளவுக்கு நிலைகுலைந்து போயிருக்கிறது.

கூலித்தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் போன்றோர் வேலையின்றி வருவாய் இழந்து அரசு தந்த ரூபாய் ஆயிரத்தையும், அரிசியையும் வைத்து 15 நாட்களுக்கு அரைவயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் காலத்தைத் தள்ளினார்கள். ஆனால், ஊரடங்கு தொடரும் நிலையில் இப்போது அந்த உணவுக்கும் வறுமை வந்து வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி, திருப்பூர் உட்படப் பல ஊர்களில் தனிமனித விலகலையும் மறந்து மக்கள் சாலையோரம் உணவுக்காகக் காத்திருக்கிறார்கள். எப்போதாவது வரும் உணவுக்காக நாள் முழுவதும் அவர்கள் காத்திருப்பதைப் பார்க்கும்போதே மனது கனக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் காக்க இதுவரை எந்தவொரு வழியும் மத்திய - மாநில அரசுகளால் முன்வைக்கப்படவில்லை.

இந்நிலையில், “இந்தச் சவாலான காலம் அடித்தட்டு மக்களுக்கு மட்டும் இல்லை, சாமானிய மக்களோடு மக்களாக இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும்தான்” என்கிறார் புரோகிதர் பாலாஜி ஐயர்.

சீர்காழி அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர்தான் நல்லூர் சுற்றுவட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் ஆஸ்தான புரோகிதர். இந்த கிராமங்களில் திருமணம், நிச்சயதார்த்தம், 16-ம் நாள் காரியங்கள் என எதற்கெடுத்தாலும் பாலாஜியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள்.

ஊரடங்கு அமலாகும் முன்புவரை, தினமும் இரண்டு, மூன்று இடங்களுக்கு குறையாமல் வேலை இருக்கும். திவசங்களுக்குப் போய்விட்டு வரும்போது அரிசி, காய்கனி, பழங்கள் என்று பை கொள்ளாமல் எடுத்துவருவார். அதில் தனக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதியை வழியில் தென்படும் ஏழைகளுக்குக் கொடுத்து விடுவார். அப்படிப்பட்டவர் கடந்த ஒருமாதமாக வீட்டிலேயே முடங்கியிருக்கிறார். அவசரச் செலவுகளுக்கு தனக்குத் தெரிந்தவர்களிடம் ஐம்பதும் நூறுமாய்க் கடன் வாங்கி சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

“போன மாசத்துல மட்டும் 60 திவசம் செய்ய வேண்டியிருந்தது. கரோனா பயத்தால் ஒருவர்கூட அழைக்கவில்லை. ஐந்து திருமணங்கள் இருந்துச்சு. எல்லாம் கேன்சலாயிடுச்சு. ஒரு நிச்சயதார்த்தம், புண்ணியாதானம் கூட நடக்கல. அதனால வருமானங்கிறதே சுத்தமா இல்லாமப்போச்சு. சாப்பாட்டுக்குப் பிரச்சினையில்லை. அரிசி இருக்கு. கொஞ்சமா காய்கனி வாங்கிக்கிறோம். இதுவரைக்கும் நான் காய் வாங்க கடைக்கே போனதில்லை. இப்ப போறப்ப கடைக்காரரே ஆச்சரியமா பார்க்குறாரு.

அதெல்லாம் பரவாயில்லை. ஆனா, எங்க அப்பாவுக்கு ஐந்து நாளைக்கு ஒருமுறை டயாலிசிஸ் பண்ணணும். ஒரு தடவைக்கு ஐயாயிரம் ஆகும். முன்னாடி வருமானம் வந்துச்சு. செஞ்சுகிட்டிருந்தோம். இப்ப ஒரு மாசமா செய்ய முடியல. பணம் இல்லாததால ஆஸ்பத்திரிக்கே கூட்டிகிட்டுப் போகல. உள்ளூர் மெடிக்கல்ல கடனுக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்து ஓட்டிக்கிட்டு இருக்கோம். எந்த நேரத்துல என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு.

ஊரடங்கு சீக்கிரம் முடிஞ்சுடுச்சுன்னா பழையபடி எல்லாம் நடக்கும். சீக்கிரம் கரோனா அழியணும். நாடு நல்லபடியா மீண்டு வரணும். இப்ப தினமும் பகவான்கிட்ட என்னோட வேண்டுதலே இதுதான்” என்கிறார் பாலாஜி.

SCROLL FOR NEXT