அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு இரு மாதங்களுக்கு சேர்த்து ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்க அரசு முன்வர வேண்டும் என, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று (ஏப்.23) வெளியிட்ட அறிக்கையில், "உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று நோயால், மக்களின் உயிர்ப் பாதுகாப்பு பிரச்சினையை மட்டுமல்லாமல், அவர்களின் பட்டினிப் பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டிய தார்மீகக் கடமை அரசுக்கு உள்ளது.
மக்கள் அனைவரின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். இச்சூழலில் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் குறிப்பாகப் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர், கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கான அரசின் நிவாரணம் சென்றடைவதில் பெருத்த காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
அரசின் நலவாரியத்தில் 75 லட்சம் அமைப்புசாராத் தொழிலாளர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 50 சதவீதம் பேருக்கு இன்னும் நிவாரணம் சென்றடையவில்லை என்று அரசே தெரிவித்துள்ளது. இது ஏழைகளின்பால் பணி செய்ய அரசு திறனற்றிருக்கிறது என்பதையும், அரசின் செயல்முறை பலவீனத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு அரசே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.
இப்பணியை அரசு மட்டுமே முன்னேடுத்து வெற்றி காண முடியாது. எனவே அரசின் செயல்பாடுகளில் உடனடியாக மாற்று வழிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே, அமைப்புசாரா தொழிலாளர்களுடன் இணைந்து முழு நேரமும் பணியாற்றும் தொழிற்சங்கங்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் சங்கங்கள், கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் அமைப்பு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், பெண் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம், நூற்றுக்கும் மேற்பட்ட ஆயத்த ஆடைத் தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் தமிழ்நாடு தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் போன்றவற்றுடன் தொடர்புகொண்டு அரசு செயல்பட்டால் இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கிடைக்கும்.
இதில் காலதாமதம் ஏற்பட்டால் அரசின் கவனக்குறைவு காரணமாக அரசுசாரா அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
மேலும், கரோனா நிவாரணப் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் தாலுகா வாரியாக அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கென ஒரு குழு அமைத்து நிவாரணத் தொகை ரூ.1,000 அளிக்க போர்க்கால அடிப்படையில் ஆவன செய்ய வேண்டும். இப்பணியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒன்றியத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் போன்றோரை இணைக்க வேண்டும்.
இப்போது இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஒரு மாதத்திற்கு ரூ.1,000 நிவாரணம் என்பதை ரூபாய் ஐந்தாயிரமாக உயர்த்த வேண்டும். அதை இரண்டு மாதங்களுக்கு சேர்த்து ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்க அரசு முன் வரவேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது.
மனித உரிமைகளைப் பேணிக் காப்பதற்கென்றே உருவாக்காப்பட்ட மாநில மனித உரிமை ஆணையம், குழந்தைகள் உரிமை ஆணையம், பெண்கள் உரிமை ஆணையம் ஆகியவை கரோனா நிவாரணம் பெறுவதில் பதிவு செய்யப்பட்ட அரசுசாரா அமைப்புகள், பதிவு செய்யப் பெறாத அரசு சாரா அமைப்புகள் சந்திக்கும் உணவுக்கான பிரச்சினைகளை மனித உரிமை மீறல்களாகப் பாவித்துத் தாமாக முன்வந்து செயல்படாதது வருத்தத்திற்குரியது.
மேலும், இப்பேரிடர்க் காலத்தில் தாலுகா ரீதியாக, மாவட்ட ரீதியாக, மாநில ரீதியாகப் பணியில் இருக்கும் நீதிபதிகளின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் தேசிய இலவச சட்ட உதவி ஆணையக் குழு இதில் தலையிடாமல் இருப்பதும், பேரிடர்க் காலத்தில் இலவச சட்ட உதவி மையங்கள் மூடிக்கிடப்பதும் வருத்தத்திற்குரிய செயலாகும்.
பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப் பெறாத அரசு சாரா அமைப்புகளின் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு, இலவச சட்ட உதவி மையத்திற்கு உண்டு என்பதை மக்கள் கண்காணிப்பகம் நினைவூட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.