காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசிக்கு கரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் காவலர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஆய்வாளர் மங்கையர்கரசி கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சிதம்பரம் பகுதியில் கரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பொதுவெளியில் மக்கள் நடமாடக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கடைகளில் தனிமனித விலகலைக் கடைப்பிடிப்பதை தனது அதிரடி ஆய்வுகள் மூலம் கண்காணித்து உறுதி செய்து வருகிறார். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தினமும் நடத்தி வருகிறார். இவரது நடவடிக்கைகளால் சிதம்பரம் பகுதியில் கரோனா ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கார்த்திகேயன் வாணியம்பாடிக்குச் சென்று தனது மனைவி மங்கையர்கரசியை சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது மங்கையர்கரசிக்குக் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து கார்த்திகேயனையும் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கார்த்திகேயனின் வாகன ஓட்டுநர் மற்றும் உடன் பணியில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடியில் இருந்து திரும்பிய பிறகு கார்த்திகேயன் கரோனா தடுப்பு விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகளிலும் தனது வழக்கமான அலுவலகப் பணிகளிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதால் அவருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், உடன் பணியில் இருந்த காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.