ராமநாதபுரத்தில் செவிலி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணியாற்றிவந்த உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சீல் வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைவிட ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவே.
இந்நிலையில் செவிலியர் ஒருவருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளார். இவர் உள்ளிட்ட சில மருத்துவப் பணியாளர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாவட்டத்தில் முதன் முறையாக மருத்துவப் பணியாளர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து சுகாதாரத்துறையினர் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சீல் வைத்தனர். மேலும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிக்கு போலீஸார் நிறுத்தப்பட்டனர்.
செவிலியருடன் பணிபுரிந்த இரண்டு செவிலியர்கள், ஒரு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியருடன் வீட்டில் தங்கியுள்ள அவரது ஒன்றரை வயது மகன், அவரது தாய், தந்தை, தொண்டியில் தங்கியுள்ள கணவர், கணவரின் தாய், தந்தை ஆகியோரை தனிமைப்படுத்தவும், கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
செவிலியர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொண்டியில் தங்கியுள்ள தனது கணவரைப் பார்க்க சுகாதாரப் பணியாளர்களுக்காக விடப்பட்டுள்ள சிறப்பு அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார்.
மேலும் நேற்று ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடந்த சுகாதாரப் பணியாளர்களுக்கான கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
அதனால் இவருடன் பேருந்தில் பயணித்தவர்கள், சுகாதாரத்துறை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் சார்பில் 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் வியாழக்கிழமை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் உள்ள பரிசோதன மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்புக்குழு மதுரை மண்டல சிறப்பு அலுவலர் சி.காமராஜ் மற்றும் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.