கரோனா தொற்று ஏற்பட்டபோது உயிர் பிழைப்பேன் என்று நம்பவில்லை என குமரியில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தொற்றுநோய் சிகிச்சை, மற்றும் கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 1130 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இவர்கள் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளடிச்சிவிளை, மணிகட்டிபொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காய்பட்டணம் தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவோரில் தேங்காய்பட்டணம், வெள்ளடிச்சிவிளையை சேர்ந்த இருவருக்கு 3 கட்டங்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று சீராகி குணமடைந்திருப்பது தெரியவந்தது.
இதைப்போல் வெள்ளடிச்சிவிளையை சேர்ந்த 88 வயது மூதாட்டிக்கு நடந்த முதல்கட்ட சோதனையில் நோய் தொற்று குணமாகி இருந்தது தெரியவந்தது.
அதே நேரம் 24 மணி நேரத்தில் நடந்த 2-ம் கட்ட பரிசோதனையில் கரோனா தொற்று மீண்டும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குணம் அடைந்தவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்தனர். இதில் வெள்ளடிச்சிவிளையை சேர்ந்தவர் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்கள் குணமடையாததால் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை.
கரோனா தொற்றில் இருந்து குணமான தேங்காய்பட்டணம் தோப்பை சேர்ந்தவர் வீடு திரும்ப விருப்பம் தெரிவித்தார். இதனால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம் அருகே நடைபெற்றது.
அவரை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன், மற்றும் கரோனா வார்டு சிறப்பு மருத்துவர்கள், குணமடைந்தவரின் உறவினர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் திரளானோர் கலந்துகொண்டு கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
அவர் வீடு சென்ற பின்பும் இரு வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர் ஆம்புலன்சில் ஏறி கை அசைத்தவாறு வீடு திரம்பினார்.
குமரியில் கரோனா தொற்றில் சிகிச்சை பெற்ற 16 பேரில் குணமடைந்து வீடு திரும்பிய அவர் கூறுகையில்; கரோனா தொற்று பரிசோதனையின்போதும் நோய் தொற்று தெரிந்தபோதும் பெரும் அச்சத்தில் இருந்தேன்.
இதில் இருந்து மீள்வோமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இறைவனை பிரார்த்தித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தேன். எனக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை மீது முழு நம்பிக்கை இருந்தது.
தற்போது முழுமையாக குணமடைந்திருப்பது மறுபிறவி போன்று உள்ளது. உயிர் பிழைப்பேன் என்று நம்பவில்லை என்றார்.