தமிழகம்

கரோனா விதிகளை மீறி வேளாண் அதிகாரிகளுக்குப் பாராட்டு விழா: பொன்னாடை போர்த்தி, கை குலுக்கிய பணியாளர்கள்

கே.கே.மகேஷ்

தேனி வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், கரோனா விதிமுறைகளை மீறி நேற்று (புதன்கிழமை) வேளாண் அதிகாரிகள் இருவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கம்பத்தில் வேளாண் உதவி இயக்குநராக இருந்த சங்கர் பதவி உயர்வு பெற்று தேனி துணை இயக்குநராவதற்கும், ஏற்கெனவே தேனியில் துணை இயக்குநராக இருந்த இளங்கோவன் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்குமே இந்தப் பாராட்டு விழா.

மாறுதலாகிச் செல்வது அதிகாரி என்பதால் அவருக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானோர் வேறு வழியின்றி இந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார்கள். மேடையில் அமர்ந்திருந்தவர்கள் உள்பட விழாவில் பங்கேற்ற பலர் முகக்கவசமும் அணியவில்லை. தனிமனித விலகலைக் கடைபிடிக்காமல் அனைத்து நாற்காலிகளிலும் நெருக்கமாக ஊழியர்கள் அமர்ந்திருந்தார்கள். மாறுதலாகிச் செல்லும் அதிகாரியையும், புதிதாக வரும் அதிகாரியையும் பாராட்டிப் புளகாங்கிதம் அடைந்த ஊழியர்கள், அவர்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி, கை குலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார்கள்.

"ஆளானப்பட்ட பிரதமரே டிவியில் பேசும்போது கூட முகத்தில் துண்டு கட்டிக்கொள்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங்கில் கூட முகக்கவசத்தோடுதான் பேசுகிறார். ஆனால், கரோனா ஒழிப்பு பணியில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அதிகாரிகள் இப்படி கூட்டம் கூடிக் கொண்டாடுகிறார்களே?" என்று கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் தன்னார்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT