கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 122 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரோனா தொற்று அறிகுறியுள்ளவர்கள் மற்றும் கரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் திண்டுக்கல் மற்றும நாமக்கல் மாவட்டங்களில் கரோனா தொற்று உள்ளவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மற்றும் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தவர்கள் கடந்த 13-ம் தேதி முதல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 20-ம் தேதி அதிகபட்மாக ஒரே நாளில் 48 பேரும், 21-ம் தேதி 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதுவரை மொத்தம் 106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 16 பேர் இன்று (ஏப்.23) டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 3 மாவட்டங்களை சேர்ந்த 122 பேர் இதுவரை குணமடைந்த நிலையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த கரோனா தொற்று உறுதியான 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்திலேயே கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதலிடத்தில் உள்ளது.