தமிழகம்

அறிக்கைகளால் முதல்வரை சோர்வடையச் செய்ய முயற்சித்தால் ஸ்டாலினே தோற்பார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

என்.சன்னாசி

முதல்வரை மனச் சோர்வடையச் செய்யும் நோக்கத்தில் அறிக்கைகளை வெளியிட்டால் அதிலும் மு.க.ஸ்டாலினே தோற்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

திருமங்கலம் தொகுதியிலுள்ள காவல் நிலையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்று முகக்கவசம், கிருமி நாசினிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகு மார் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியில் செல்லும் போது சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். தேவையான இடங்களில் கிருமிநாசினி தெளிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் முதல்வர் செயல்படுகிறார். தமிழக மக்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.

மக்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.12,000 கோடி, பேரிடர் மேலாண்மைக்கு ரூ.1000 கோடி என தேவையான நிதியை வழங்கவேண்டும் என, எதிர்க்கட்சிகள் சிந்திக்கும் முன்பே முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தவர் முதல்வர்.

மேலும் ,காணொலி காட்சியில் பிரதமரிடம் ஆலோசனை நடத்தியபோதும் மாநிலத்திற்குத் தேவையான நிதிக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கான ஆதாரத்துடன் பேசினார். இதன் மூலம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக முதல்வர் செயல்படுகிறார்.

தொழிலாளர்கள், விவசாயிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான உதவிகளை செய்கிறார்.

நோய் தொற்று சீனாவில் ஆரம்பிக்கும்போதே ரூ.500 கோடியை பேரிடர் மேலாண்மை துறைக்கு ஒதுக்கினார். இந்த நோய் தொற்று வந்தவர்களை அதிகமாக காப்பாற்றிய மாநிலம் தமிழகம்.

உயிர் இழப்பு சதவீதம் தமிழகத்தில் குறைவு.

உலகச் சுகாதார அமைப்பு, மத்திய குடும்ப நலத்துறையின் அறிவுரைப்படி தமிழகத்தை நோய் தாக்கத்திலிருந்து தடுக்க, போதிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

முதல்வர் தினந்தோறும் சிந்தித்து, மக்களைக் காக்க மகத்தான பொறுப்பில், தீர்க்க தரிசனத்துடன் முடிவெடுப்பதை அவரது அருகில் இருந்து நான் பார்க்கிறேன்.

இத்தகைய சூழலில் மு.க.ஸ்டாலின் சொல் அம்புகளால் முதல்வரை மனச் சோர்வடையச் செய்ய நினைத்தாலும், அதில் அவர் தான் தோற்பார். இதை மு.க. ஸ்டாலின் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT