ஊரடங்கு அமலில் இருப்பதால் அரசு கேபிள் கட்டணத்தை 3 மாதத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என, நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் செயலாளர் க.திருநாவுக்கரசு தெரிவிக்கையில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வேலைக்கு செல்லாமல், வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் சில உதவிகள் வழங்கினாலும் அவை போதுமானதாக இல்லை. ஏழை, எளிய தொழிலாளர்கள் அனைவரும், அரசு கேபிள் டிவி மற்றும் தனியார் மூலம் இணைப்பு பெற்றுள்ளனர்.
வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு, டிவி மட்டுமே, முக்கிய பொழுதுபோக்காகவும்,செய்திகளை அறியவும் தொடர்பு சாதனமாக இருக்கிறது. வருவாய் இல்லாத தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், சிறு வியாபரிகள் கேபிள் கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில் செட்டாப் பாக்ஸ் முறையில் தற்போது ஒளிபரப்பு இருப்பதால் சந்தா மற்றும் கட்டணம் செலுத்த முடியாமல் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
வீட்டில் முடங்கியுள்ள மக்களின் மன அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில், வெளியுலக தொடர்பு சாதனமான கேபிள் டிவியும் துண்டிக்கப்படும் சூழலால் மன அழுத்தம், மன உளைச்சல் அதிகரிக்கும் நிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது
எனவே, 3 மாதங்களுக்கான அரசு கேபிள் டிவி கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதோடு, தனியார் நிறுவனங்களுக்கும் அரசின் உத்தரவு பொருத்தும் வகையில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ,செட்டாப் பாக்ஸ் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது எனவும் கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.