கரூர் மாவட்ட ஊடகத்துறையினருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடத்துறையினருக்கு கரோனா தொற்று பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முகாமை தொடங்கி வைத்தார். இதில் பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் சளி மாதிரிகள் மற்றும் கையில் ரத்தம் எடுக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பரிசோதனை முடிவு இன்று (ஏப்.23) அறிவிக்கப்பட்டது. அதில் ஊடகத்துறையினருக்கு நேற்று நடந்த பரிசோதனையில் பங்கேற்ற 48 பேரில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் தெரிவித்தார்.
மாவட்ட தலைநகரில் பணியாற்றும் ஊடகத்துறையினருக்கு மட்டுமே நேற்று பரிசோதனை நடைபெற்றது. விரைவில் வட்ட அளவில் ஊடகத்துறையினருக்கு பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.