தமிழகம்

சென்னையின் சராசரி நிலத்தடி நீர்மட்ட அளவு: குடிநீர் வாரியம் மட்டுமே தகவல்களை வெளியிடும்

வி.சாரதா

சென்னையின் சராசரி நிலத்தடி நீர்மட்ட தகவல்கள் குறித்த குழப்பத்தை தவிர்ப்பதற்காக மாநில நிலத்தடி நீராதாரங்கள் துறை சென்னையின் நீர்மட்ட தகவல்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டது.

ஒவ்வொரு மாதமும் சென்னை உட்பட 32 மாவட்டங்களின் சராசரி நிலத்தடி நீர்மட்ட தகவல்களை மாநில நிலத்தடி நீராதாரங்கள் துறை வெளியிடுகிறது. அதே நேரம், சென்னை குடிநீர் வாரியமும் சென்னையின் நிலத்தடி நீர்மட்ட தகவல்களை 145 கண்காணிப்பு கிணறுகள் மூலம் சேகரித்து வருகிறது.

சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநில நிலத்தடி நீராதாரங்கள் துறை வழங்கும் சென்னையின் நீர்மட்ட தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டன. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட தகவல்களின்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் 4.25 மீட்டராக இருந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நிலத்தடி நீர்மட்டம் 2.98 மீட்டராக உயர்ந்திருந்தது.

ஆனால், மாநில நிலத்தடி நீராதாரங்கள் துறையின் தகவல்கள் படி, கடந்த ஜூன் மாதம் 5.06 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.63 மீட்டராக குறைந்திருந்தது. இது போன்ற வேறுபாடுகள் ஜனவரி மாத தகவல்களிலும் காணப்பட்டன. இந்நிலையில் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து இருவேறு தகவல்கள் வெளியாவதை தவிர்ப்பதற்காக மாநில நிலத்தடி நீராதாரங்கள் துறை சென்னையின் நிலத்தடி நீர்மட்ட தகவல்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவிக்கும்போது, “மாநில நிலத்தடி நீராதாரங்கள் துறையை விட சென்னை குடிநீர் வாரியத்துக்கு அதிக கண்காணிப்பு கிணறுகள் சென்னையில் உள்ளன. எனவே சென்னை குடிநீர் வாரியத்தின் தகவல்கள் மாநில நிலத்தடி நீராதாரங்கள் துறையின் தகவல்களை விட துல்லியமாக இருக்கும்.

எனவே குழப்பத்தை தவிர்ப்பதற்காக மாநில நிலத்தடி நீராதாரங்கள் துறை சென்னையின் நீர்மட்ட தகவல்களை வெளியிடாது. தமிழ்நாட்டின் மற்ற 31 மாவட்டங்களின் தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும்” என்றார். சென்னையின் நீர்மட்ட உயர்வு குறித்து குடிநீர் வாரிய அதிகாரி கூறும்போது, “சென்னையில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் முறையாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலத்தடி நீர் அமைப்புகள் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. வீடுகள்தோறும் உள்ள மழைநீர் சேகரிப்பு வசதிகளை பராமரிப்பதற்கும், புதிதாக உருவாக்குவதற்கும் குடிநீர் வாரியம் தொடர்ந்து உதவி புரிந்து வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT