கடலூர் மாவட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும் வேளாண் பணிகள், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடலூர் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கடந்த 15-ம் தேதி முதல் இயங்கி வருகின்றன. இதில் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மிகப்பெரியதும், அதிக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் புழங்கக்கூடிய விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு தற்போது நெல், எள், உளுந்து, மணிலா உள்ளிட்ட பயறு வகைகள் வரத்து அதிகமாக உள்ளது.
விவசாயிகள் பெருமளவில் விளைபொருட்கள் கொண்டு வருவதால், கூட்டம் அதிகம் கூடுவதாலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 300 லாட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை 250 லாட்டுகளாக குறைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு விவசாயி ஒரே வகையான விளைபொருளை எத்தனை மூட்டை கொண்டு வந்திருந்தாலும் அவருக்கு ஒரு லாட் வழங்கப்படும். அவரே வெவ்வேறு வகையான தானியங்களை எடுத்து வந்திருந்தால் அப்பொருளின் எண்ணிக்கைக்கு ஏற்ப லாட் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்படி, நாளை முதல் (ஏப்.24) 250 லாட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏலத்திற்கு பொருட்களைக் கொண்டு வரும் விவசாயிகள் முன்பதிவு செய்து, அனுமதிச் சீட்டு பெற்ற பின்னரே பொருட்களை ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி நெல் 210 மூட்டைகளும், மணிலா 125 மூட்டைகளும், எள் 500 மூட்டைகளும், உளுந்து 450 மூட்டைகளும், வரகு 90 மூட்டைகளும் மற்றும் கடுகு, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, தேங்காய் பருப்பு, திணை, சோளம், ஆகியவையும் குறிப்பிட்ட அளவுக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.