தமிழகம்

10 ரூபாய்க்கு முகக் கவசம்: சிறைக்கைதிகள் தயாரித்த சுமார் 4 லட்சம் கவசங்கள்!

குள.சண்முகசுந்தரம்

தமிழகத்தின் முக்கிய சிறைகளில் உள்ள கைதிகளைக் கொண்டு சுமார் 4 லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் முகக் கவசங்களுக்கும், கிருமிநாசினிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த வகையில் தாங்களே முகக் கவசங்களைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனிடையே, முகக் கவசங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக பல்வேறு அமைப்புகளும் முகக் கவசங்கள் தயாரிப்பில் முனைப்புகாட்டி வருகின்றன. காவல் துறையில் இருக்கும் பெண் காவலர்களும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழகத்தின் முக்கிய சிறைகளில் உள்ள கைதிகளைக் கொண்டும் முகக் கவசங்களைத் தயாரிக்கும் வேலைகளை தமிழக சிறைத் துறையும் முடுக்கிவிட்டது.

இதையடுத்து, கடந்த 21-ம் தேதி நிலவரப்படி, சென்னையிலுள்ள புழல் சிறையில் 50 ஆயிரத்து 75, வேலூர் மத்திய சிறையில் 15 ஆயிரத்து 130, கடலூர் மத்திய சிறையில் 24 ஆயிரத்து 500, திருச்சி மத்திய சிறையில் 51 ஆயிரத்து 100, மதுரை மத்திய சிறையில் 58 ஆயிரத்து 600, பாளையங்கோட்டை மத்திய சிறையில் 34 ஆயிரத்து 750, கோவை மத்திய சிறையில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 499 என மொத்தம் 4 லட்சத்து 29 ஆயிரத்து 654 முகக் கவசங்கள் கைதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

மூன்று லேயர்கள் கொண்ட இந்த முகக் கவசங்களை தலா 10 ரூபாய்க்கு சிறை நிர்வாகங்கள் விற்பனை செய்கின்றன. முகக் கவசங்கள் தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT