நெல்லை மாவட்டம் வள்ளியூர் கரோனா தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டிருநத 24 பேர்களும் கரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவுகள் வந்ததை அடுத்து அனைவரும் வீடுதிரும்பினர்.
இருப்பினும் அவர்கள் அனைவரும் வீ டுகளில் அடுத்த 28 நாட்கள் தனிமையாக இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையை அடுத்த ஆவுடையாள்புரத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் பல்வேறு கடைகளில் கூலிவேலை செய்து வந்தனர்.
ஊரடங்கு தடையை அடுத்து இவர்களுக்கு வேலை இல்லாததால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். இதனை அடுத்து இவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் சுமையேற்றும் மினிடெம்போ லாரியில் சென்னையில் இருந்து 20-ம் தேதி புறப்பட்டனர்.
மினிடெம்போ லாரியை ஆவுடையாள்புரத்தைச் சேர்ந்த ராஜமணி ஓட்டி வந்தார். இவர்கள் வாகனம் வள்ளியூர் வந்தபோது வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் திருப்பதி தலைமையிலான போலீஸôர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
பின்னர் இவர்கள் அனைவரும் வள்ளியூரில் உள்ள கரோனா தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து வந்ததால் வட்டாட்சியர் செல்வன் முன்னிலையில் மருத்துவ அலுவலர் கோலப்பன் மற்றும் குழுவினர் கரோனா பரிசோதனை செய்தனர்.
பின்னர் இவர்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இவர்கள் அனைவரும் ஆவுடையாள்புரத்தில் உள்ள அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டன்.
ஆனாலும் 28 நாட்கள் வீடுகளில் தனிமையாக இருக்கவேண்டும் வெளியில் வரக்கூடா து என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.