தமிழகம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மதுரை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு 104 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். அதனால் காலை 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை வெளியில் வேலை செய்வதை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, தேனி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. வேலூர், திருத்தணி, சேலம், மதுரை, கரூர் பரமத்தி, தருமபுரி ஆகிய இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், இரணியல் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை பகுதியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT