சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5 டிஎம்சி-க்கு மேல் நீர் இருப்பு இருப்பதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.
சென்னைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகள் மூலமாக குடிநீர்விநியோகிக்கப்படுகிறது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி. தற்போது இவற்றில் 5,988 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
தற்போது 4 ஏரிகளிலும்தேவையான அளவு நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடுஏற்பட வாய்ப்பில்லை. சென்னையில் தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் 2 நிலையங்களில் இருந்து 360 மில்லியன் லிட்டரும், செம்பரம்பாக்கம், புழல் மற்றும்வீராணம் ஏரியில் இருந்து மீதமுள்ள 290 மில்லியன் லிட்டரும் பெறப்படுகிறது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
கரோனா அச்சத்தால் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் இயங்காததால் 10 சதவீதம் தண்ணீர் மிச்சமாகிறது. அந்த தண்ணீர், பொதுமக்கள் வீட்டிலே இருப்பதாலும், கோடை காரணமாக தண்ணீர் பயன்பாடு அதிகரித்திருப்பதாலும் ஏற்படும் கூடுதல்தேவையைப் பூர்த்தி செய்துவிடுகிறது.
அதனால் சென்னையில் தொடர்ந்து 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்பு நிலை திரும்பும்போது 5 முதல் 15 சதவீதம் குடிநீர் பயன்பாடு அதிகரிக்கும்.
4 ஏரிகளிலும் 11 டிஎம்சி (11 ஆயிரம் மில்லியன் கன அடி) நீர் இருப்பு இருந்தால் ஓராண்டு முழுவதும் தினமும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்க முடியும். கடந்த 2015-16-க்கு பிறகு இப்போதுதான் ஏரிகளில் தேவையான அளவு நீர் இருப்பு உள்ளது. இந்த நீரைக் கொண்டு மட்டும் சென்னையில் 5 மாதங்களுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.