தமிழகம்

கரோனாவால் 2 ஆண்டுகள் சுற்றுலாத் துறை முடங்கும் அபாயம்: பயணங்களை மக்கள் தவிர்ப்பார்கள் என்பதால் சிக்கல் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகள் சுற்றுலாவும், அது தொடர்பான தொழில்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாவில் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கோடைவாசஸ்தலங்கள், இயற்கை வளங்கள், ஆன்மிகத் தலங்கள், தொன்மையான நினைவுச் சின்னங்கள், எழில்மிகு கடற்கரைப் பிரதேசங்களை உள்ளடக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கொடைக்கானல், மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, வேலூர், திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலாவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகத் திகழ்கின்றன. தென் தமிழகத்தில் மதுரையில் ஆண்டுக்கு சராசரியாக 3 கோடி சுற்றுலாப் பயணிகளும், கொடைக்கானலுக்கு 1 கோடியே 60 லட்சம் பேரும் வருகிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டில் மதுரையில் மட்டும் 3 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து, 215 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 லட்சத்து 52 ஆயிரத்து 950 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். மதுரையில் கடந்த 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2019-ல் 16 சதவீதம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் 10 சதவீதம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தற்போது கோடைகாலம் என்பதால் தமிழக சுற்றுலாவுக்கு இந்த மாதங்கள் பொற்காலம். ஆனால், கரோனாவால் தமிழக சுற்றுலாத்துறை அடியோடு முடங்கிப்போய் உள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு மற்ற தொழில் துறைகளாவது ஓரளவு மீண்டு வழக்கம்போல் செயல்படத் தொடங்கும். ஆனால், சுற்றுலாத்துறை அடுத்த 2 ஆண்டுகளுக்கு முடங்கும் அபாயம் இருப்பதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள், அதனைச் சார்ந்த தொழில் முனைவோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மதுரை ட்ராவல் கிளப் தலைவரும், மதுரை கடம்பவனம் நிர்வாக இயக்குநருமான சித்ரா கணபதி கூறுகையில், ''சுற்றுலாவைப் பொறுத்தவரையில் அது கேளிக்கைக்கான அம்சமாகும். அத்தியாவசிய, அன்றாடத் தேவைக்குப் போக மகிழ்ச்சிக்காக செலவிடுகிற செலவாகும்.

அத்தியாவசியத் தொழில்களே எல்லா மட்டத்திலும் அடிவாங்கியுள்ளது. அரசு மூன்று மாதங்களுக்கு வங்கிக் கடன் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அதற்கான வட்டியையும் மீண்டும் செலுத்தியாக வேண்டும். ஆனால், சுற்றுலாத்துறை முன்பு போல் செயல்பட 2 ஆண்டுகளாகும். சுற்றுலாப் பயணிகளை நம்பிச் செயல்படக்கூடிய சாதாரண ஆட்டோ, டாக்ஸி தொழிலாளர்கள் முதல் சுற்றுலா சேவை நிறுனங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா முடிவுக்கு வந்தாலும் சிறிது காலம் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பார்கள். அதனால், முதலில் அடிவாங்கக்கூடிய தொழில் சுற்றுலாவும், அதனை சார்ந்த தொழில்களும்தான். சுற்றுலாவில் மதுரை போன்ற ஆன்மிக நகரங்களில் கோயில் சுற்றுலா பெரும் பங்கு வகிக்கிறது. குழந்தைகளுடன், குடும்பத்துடன் மக்கள் கோயிலுக்குக் கூட வரத் தயங்குவார்கள். ஊதியக் குறைப்பு, பொருளதார நெருக்கடியால் மக்கள் சிறிது காலம் சுற்றுலா செல்வது, ஹோட்டல்களில் தங்குவது, சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள்.

பணத்தைச் சேமித்து வைக்க வேண்டிய எண்ணம் வரும். வியாபார ரீதியாகக்கூட வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பார்கள். வீடியோ கான்பரன்சிங்கில் வியாபாரப் பேச்சுவார்த்தை, ஆன்லைன் மீட்டிங் நடத்துவார்கள். விமானங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க 3 இருக்கைகளுக்கு ஒருவர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதனால், அதன் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பதால் தமிழகத்திற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை அடியோடு வீழ்ச்சியடையும்.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு சுற்றுலா சார்ந்த தொழில்கள், அதன் தொழிலாளர்கள் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும் என்பது தெரியவில்லை'' என்றார்.

மதுரை மாட்டுத்தாவணி டாக்ஸி டிரைவர் குமரேசன் கூறுகையில், ''நான் சொந்தமாகக் கார் வாங்கி ஓட்டுகிறேன். மாதம் ரூ.11,500 வங்கித் தவணை கட்ட வேண்டும். அன்றாட வருமானமே பாதிக்கப்பட்டுள்ளதால் தவணையில் விலக்கு அளித்தாலும் அடுத்த சில மாதங்கள் சுற்றுலாப் பயணிகள் வரமாட்டார்கள் என்பதால் அடுத்தடுத்த மாதங்கள் எப்படி மாதத் தவணை கட்டுவது என்பது தெரியாமல் உள்ளேன்'' என்றார்.

SCROLL FOR NEXT