தமிழகம்

காவலர்கள் கரோனா எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்: நாகை எஸ்பி அறிவுரை

கரு.முத்து

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அனைத்துக் காவல் நிலையங்களும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது:

''ஊரடங்கு உத்தரவைக் காவல்துறை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதால் காவலர்கள் பணி மிகவும் முக்கியப் பணியாக இருக்கிறது. ஊரடங்கு தடையை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்காக மக்களிடம் நெருக்கமாகப் பழக வேண்டியிருப்பதால் காவலர்களுக்கும் கரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் காவல் துறையினர் அனைவருக்கும் முகக் கவசம், கிருமி நாசினி, உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள காவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். அத்துடன் தங்கள் குடும்பப் பாதுகாப்பையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். கரோனா வைரஸ் தொற்று உள்ள பகுதியில் கண்காணிப்புப் பணியில் உள்ள காவலர்கள் கூடுதல் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

எதிர்பாராத விதமாக தங்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் தாங்களாக முன்வந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும்.''

இவ்வாறு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT