கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் இறுதிச் சடங்குகளில் தமிழக அரசைச் சேர்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ பங்கேற்று அஞ்சலி செலுத்தாதது மிகுந்த வேதனைக்குரியது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.22) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் சமீபத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கரோனா தடுப்பின்போது ஒரு வேளை துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் அவர்களுடைய இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை முதல் அனைத்து அரசு மருத்துவர்களும் கறுப்புப் பட்டை அணிந்து பணிபுரியும்படி அனைத்து அரசு மருத்துவர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.
தங்களது அவலநிலை குறித்து மருத்துவர்கள் போராடி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு தமிழக அரசின் அலட்சியப்போக்குதான் காரணம்.
மருத்துவர்கள், பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்புக் கவச உடைகள், முகக்கவசங்கள், தங்கும் வசதிகள், உணவு முதலியவை வழங்கப்படவில்லை. இதனால் ஏராளமான மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்கள், பரிசோதனைக் கருவிகள் போன்றவற்றை போதிய அளவு கொள்முதல் செய்யவில்லை. உற்பத்தியும் செய்யவில்லை.
பொது இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் மருத்துவர்களிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
கரோனா நோய்க்காக சிகிச்சை வழங்கி, தொற்றுக்கு ஆளாகி வீரமரணமடைந்த மருத்துவர் சைமன், மருத்துவர் லட்சமி நாராயணரெட்டி, மருத்துவர் ஜெயமோகன் ஆகியோரின் உடல்களுக்கு கவுரவமான முறையில் இறுதிச்சடங்குகள் நடக்க முடியாத அவலநிலை ஏற்பட்டது. இத்தகைய இறுதிச் சடங்குகளில் தமிழக அரசை சேர்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ பங்கேற்று அஞ்சலி செலுத்தாதது மிகுந்த வேதனைக்குரியது.
அதேபோல சமீபத்தில் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் அடக்கம் செய்யவேண்டிய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் செய்யாமல் வேலங்காடு சுடுகாட்டில் நடு இரவில் ஒரு ஆதரவற்றவர் போல ஒருசிலர் முன்னிலையில் புதைத்துவிட்டார்கள் என்று அவரது மனைவி ஆனந்தி அளித்திருக்கும் பேட்டி நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.
"என்னுடைய கணவர் அடக்கம் செய்யப்பட்டதை நானோ, என் குடும்பத்தினரோ எங்கள் கண்களால் கூட பார்க்க முடியவில்லை. வேலங்காடு மயானம் ஒரு சுடுகாடு. அங்கு எந்த கல்லறையும் கிடையாது. அங்கு புதைக்கப்பட்ட எனது கணவர் உடலை மீட்டெடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்தால்தான் எனது கணவரின் ஆன்மா சாந்தியடையும்" என்று அவர் கோரியிருக்கிறார்.
அவரது கோரிக்கையில் உள்ள மனக்குமுறலையும், நியாயத்தையும் தமிழக முதல்வர் புரிந்துகொண்டு அவரது கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி மனிதாபிமான உணர்வோடு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு சிகிச்சை வழங்கி தங்கள் உயிரை இழந்த மருத்துவர்களுக்கு இன்று இரவு 9 மணிக்கு நாடு தழுவிய வகையில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி விழிப்புணர்வு இயக்கம் நடத்துகின்றனர்.
இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துத் தமிழக மக்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நண்பர்களும் சமூக இடைவெளிவிட்டு தங்கள் வீட்டு வாசலிலோ, மொட்டை மாடியிலோ 10 நிமிடங்களுக்கு மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் ஏந்தி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வேண்டுகிறேன்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.