முதல்வர் ஐயா...என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் என உயிரிழந்த மருத்துவரின் மனைவி கண்ணீருடன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் காணொலி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல மருத்துவரின் உடலைப் புதைக்க அவர்களது சமூக வழக்கப்படி கல்லறைக்குக் கொண்டு சென்றபோது எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவரின் உடலைப் புதைக்க விடாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் வேலங்காட்டில் உள்ள மற்றொரு சமூக மயான பூமியில் உடல் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் அரசு ஊழியர்களைத் தாக்கினர். ஆம்புலன்ஸை உடைத்தனர். இச்சம்பவம் அகில இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய மருத்துவக் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது. கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா அரசு அறிவித்தது.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தைத் தடுப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் வைத்தார். இந்நிலையில் மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்தும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இத்தனை நிகழ்வுக்கும் பின்னணியாக அமைந்தது மறைந்த மருத்துவர் சைமனின் உடல் அடக்கத்தை சிலர் தடுத்ததுதான். மருத்துவர் சைமனின் சமூகம் சார்ந்த கல்லறையில் அவரது உடல் புதைக்கப்படவில்லை. இதனால் தற்போது கரோனா தொற்று சந்தேகத்தில் வீட்டில் தனிமையில் இருக்கும் மருத்துவர் சைமனின் மனைவி வீட்டிலிருந்தபடி காணொலி மூலம் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
தனது கணவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை தங்கள் சமூகக் கல்லறையில் புதைக்க உதவும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
அந்தக் காணொலிப் பேச்சு:
“முதல்வருக்கு பணிவான வேண்டுகோள். என் கணவர் மருத்துவர் சைமன் கடந்த 19-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அருட்தந்தை அனுமதி அளித்தார். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டார்.
என் கணவர் சிகிச்சையில் இருக்கும்போது அவர் வென்டிலேட்டர் சுவாசக்கருவிக்குச் செல்லும் முன் என்னுடனும் என் பிள்ளைகளுடனும் பேசும்போது, 'ஒருவேளை நான் திரும்பி வரவில்லை என்றால் நம் வழக்கப்படி அடக்கம் பண்ணுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.
முதல்வர் கரோனா நோய்த் தடுப்பை நல்லமுறையில் கையாளுகிறார். அதனால் தமிழகத்தில் மட்டும்தான் உயிரிழப்பு குறைந்துள்ளது. என் கணவரை சீல்டு செய்யப்பட்ட சவப்பெட்டியில் வேலங்காடு இடுகாட்டில் புதைத்துள்ளோம். அதை அப்படியே எடுத்து எங்கள் வழக்கப்படி எங்கள் இடுகாட்டில் அடக்கம் செய்ய உதவ வேண்டும். இதனால் யாருக்கும் எவ்விதத் தொற்றும் பரவாது.
2 பிள்ளைகளுடன் விதவையாக நிற்கிறேன் முதல்வர் ஐயா. கண்ணீருடன் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவச் சேவையில் உயிரிழந்த என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வையுங்கள்”.
இவ்வாறு கண்ணீர் வழிய மருத்துவர் சைமனின் மனைவி முதல்வருக்கு க்கோரிக்கை வைத்துள்ளார்.